"இந்த நாவல் ஒரு "மல்ட்டி க்ரைம் த்ரில்லர் " என்று சொல்லக்கூடிய அளவுக்கு க்ரைம் அக்கரன்ஸ் நிகழ்வுகள் நிறைந்தது. சமூகத்தில் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் தாங்கள் என்றென்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக, எப்படிப்பட்ட கொடுமையான செயலையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பது இந்த நாவலில் நெஞ்சம் பதைபதைக்க சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு ட்ராக்கில் இந்த கதை சொல்லப்பட்டாலும் இன்னொரு ட்ராக்கில் சினிமா உலகைப் பின்னணியாகக் கொண்ட சம்பவங்களும் இடம் பெறுகிறது. நடிகை நீலாம்பரி முதல் ட்ராக் கதையில் உள்ள நபர்களோடு எப்படி சம்பந்தப்படுகிறாள் என்பதும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ட்ராக்குகளும் போதாது என்று மூன்றாவதாக ஒரு குடும்பக் கதையும் இணைகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் எதுமாதிரியான குற்றங்களைச் செய்கிறார்கள் என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த நாவல் பத்திரிக்கையில் வெளிவந்து நிறைவடைந்த போது திரையுலகில் பிரபலமாய் இருந்த சினிமா டைரக்டர் ஒருவர் எனக்கு போன் செய்து, " அபாயம் தொடு" என்கிற கதையை சமுதாயத்தில் உள்ள எல்லாத் துறைகளையும் சேர்ந்த தலைவர்கள் அவசியம் படிக்க வேண்டும். படித்து திருந்த வேண்டும். நூறு பேர்களில் ஒருவர் திருந்தினால் கூட போதுமானது" என்றார்."