இராவ்பகதூர் C.M. இராமசந்திரஞ் செட்டியார், பி.ஏ., பி.எல். ஆணையாளர், இந்து அறநிலையப் பாதுகாப்புப் கழகம்.
பல்லவர் வரலாறு என்ற இந்நூல் மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ளது. நாளிதுவரை வெளிவந்துள்ள பல நூல்களை ஆராய்ந்து நாட்டின்கண் மறைந்து கிடக்கும் பல சான்றுகளைக் கண்டுபிடித்துப் பல இலக்கியங்களிற் கண்ட குறிப்புகளைத் தெரிந்தெடுத்துஅவற்றை ஒழுங்குபடத்தொகுத்துத்தமிழ்நாட்டிற்கு ஒர் அரிய பெரிய ஆராய்ச்சி நூலாக இதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். படிப்பு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பல ஏடுகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடுவார்போல் அல்லாது, உண்மைச் சான்றுகளை அறியவேண்டிப் பல இடங்களுக்கும் நேரிற் சென்று ஆராய்ந்த பொருள்களை விடாது ஒழுங்குப்படுத்தியிருப்பதே இந்நூலுக்கு ஓர் அரிய மதிப்பு ஆகும். இதனைப் போலவே மற்றத் தமிழ் அரசர் பரம்பரைகளுக்கும் தமிழ் நாடுகளுக்கும் வரலாற்று நூல்கள் வெளிவருவது ஒரு சிறந்த் முறையாகும். அந்தப் பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் கழகத்தார் அருஞ்செயலும் போற்றத் தக்கதே.
பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள்வரை தமிழ்நாட்டில் மன்னர் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றும், அவர்களுடைய பண்டைக்குலம் இன்னவென்று உறுதியாகக் கூறுவார் இல்லை. வடமேற்கு நாட்டிலிருந்து வந்த அயலவர்கள் என்றும், ஈழநாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும், தென்னாட்டிலேயே இருந்தவர்கள் என்றும் பலவழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஒருவிதக் கோட்பாடு முளைத்து நிலைநின்று கொண்டிருந்தது. அந்தக் கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக் கொண்டு வருகிறது. அஃது என்ன எனில்,எந்தக்குலம்.அல்லது பரம்பரையை எடுத்துக்கொண்ட போதிலும் அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அந்நாடு ஏறக்குறைய இந்தியாவிற்கு வடமேற்கில் இருக்கக் கூடும் என்றும் சொல்லி, அதற்காகப் பலவகைச் சான்றுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆகும். இவ்வகைக் கோட்பாடு பல்லவர் தொடக்கத்திற்கும் வருவிக்கப்பட்டது. ஆகவே, பெயரை நோக்கிப் பாரசீக நாட்டிற்கும் பல்லவர் தொடக்கம் கொண்டுபோகப் பட்டது. அவ்வரசர்கள் வடமொழியில் அக்கரை எடுத்துக் கொண்டிருந்ததனால் இக்கூற்று வலியுறுத்தலும் செய்யப் பட்டது. ஆனால், 'அம் மன்னர்கள் ஏன் தமிழ் மன்னர்களாக இருக்கக்கூடாது? என்பதுதான் இப்போது கேட்கப்படுகிற கேள்வி. அக் கேள்வியை மறுப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் என்று அறிய வேண்டும். இங்கிலாந்தில் ஜார்ஜ் I ஜெர்மானியனாக இருந்த போதிலும் அவனது மரபு ஆங்கிலத்தில் கலந்து ஆங்கிலமாகி விடவில்லையா! அதுபோலவே பல்லவரும், ஒருவேளை, வெளி நாட்டிலிருந்து புகுந்திருந்த போதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன அல்லவா? உண்மையில் அம் மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமே என்பதற்கு எதிரிடை வாதம் யாதுமில்லை என்னலாம். 'பல்லவர் என்ற சொல் தமிழ் அல்லவா? இப்போது பல் நீண்டுள்ளவனைப் 'பல்லன், பல்லவன் என்று கேலி செய்வதில்லையா அம் மன்னவரில் மூல புருடனுக்குப் பல் நீண்டு இருக்கலாம். அச்சொல் அம் மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக் காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல் கொண்ட ஒரு மன்னனுக்கு அப்பெயர் நிலையத்திருக்கிறது. முடப் பாண்டியன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே
பல்லவர்களே காரணர்களாக இருந்தனர். அவர்களால் ஆயிரக் கணக்கான சமய நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ்மக்கள் பெருமையும் விரிந்தது.
பல்லவர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகளுள் சிறந்தவை கோயில்களே. அதுவரை மண்தளி (கோவில்)களாக இருந்தவை கற்றளிகளாக மாற்றப்பட்டன. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து குடை கோவில்களைக் கண்டனர். (இப்போது குகைக் கோவில்கள் என்கிறார்கள்.) குடை கோவில்கள் சமணர்களுடைய பழக்கத்தின்மேல் ஏற்பட்டவை என்று கூறவேண்டும். பண்டைக் குடை கோவில்கள் சமணர்கள் தவத்திற்காகக் குடைந்தவையே. அதனைப் பின்பற்றிப் பல்லவர்கள் குடை கோவில்களை ஆக்கினார்கள். (மகேந்திரவர்மன் சமணனாக இருந்து சைவனாகிக் குடை கோவில்களை முதலில் குடைந்தவன்.) பிறகு தனிப் பாறைகளைக்கோவில்களாகச் செதுக்கினார்கள். (மாமல்லைச்சிற்பத் தேர்களைக் காண்க.) பிறகு கற்களைப் படிமானம் செய்து கட்டடமாகக் கட்டினார்கள். (மல்லைச் சலசயனப் பெருமாள் கோவில்,திருத்தணிகைவீரட்டானேசர்கோவில்) இம்மூன்றுவகைக் கோவில்களும் பல்லவர்கள் சமைத்தவையே. இவற்றைப் பின்பற்றியே சோழர்கள் பெருங் கோவில்களை எழுப்பினார்கள். ஆகவே, பல்லவர்களே கோவில் அமைப்பிற்கு மூல புருடர் என்று கூறல்வேண்டும். அவர்கள் காலச் சிற்பங்களை வெகு எளிதில் கண்டுகொள்ளலாம். தூண்கள் கன சதுரங்களும் இடையில் 8 பட்டைகளும் கொண்டுள்ளன. துவார பாலகர்கள் இரு கைகள் கொண்டுள்ளார்கள். திருமால் எறியும் படை தரித்தவர். இலிங்கத்திற்குப்பின்சோமஸ்கந்தமூர்த்திஉண்டு. இச்சின்னங்கள் இருப்பின் பல்லவர் கோவில் என்றறிக. இவர்கள் காலத்தில்தான் யானை முதுகு அல்லது தூங்கானை மாடம் என்ற விமானம் தோன்றியது. (திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் விமானம் காண்க.) ஏற்பட்டன. மேலும், பல்லவர்கள் காடவர் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள் (காடு வெட்டி நகரத்தின் பெயர் காண்க. இஃது இப்போதுகார்வெட்டிநகரம் எனப்படுகிறது) அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. அவை பிற்காலப்பெயர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவற்றையே தமிழ் நூல்கள் ஆதரிக்கின்றன. போத்தரையர் என்பது அவர்களுடைய சிறப்புப்பெயர்.போது என்பது மலருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். மலையாளத்தில் கொங்கு அரசன் போது என்ற சொல் எருமைக் கடாவில் வந்து போர் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. (கொங்குப் படை வரலாறு காண்க.)
இப்போதும் தொண்டை நாட்டிலும் அதனைச் சுற்றிலும் போத்தராச கோவில்கள் உண்டு. இவை பல்லவர் காலத்து வழக்கு என்று அறியக்கூடும். அக் கோவில்களை அரச பரம்பரையினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர் தமிழ் நாட்டினரே என்று கொள்வதே தகுதி என்னலாம்.
பல்லவப் பெருமக்கள் வடமொழிக்குப் பல உதவிகள் புரிந்துள்ளார்கள். அதற்குக் காரணம் அக்காலத்தில் வடநாட்டு நாகரிகம் தெற்கே பரவத் தொடங்கியதே. எந்த இயக்கமும் முதலில் அதிகமாகப் பாராட்டப் படுவது இயற்கை; பின்னர், அதன் வேகம் குறைந்து விடுவது வழக்கம். பல்லவ அரசு தொடங்கிய காலத்தில் வடக்கே இருந்த பெளத்தமும் சமணமும் வந்தன. அவற்றின் குரவர்கள் தம்மோடு வட மொழியைக் கொண்டுவந்தார்கள். காஞ்சி அச் சமயங்கட்கு நடுநாயகமாக விளங்கியது. பல்லவ மன்னர்களும் அவற்றை ஆதரித்தனர். ஆகவே, வடமொழிக்கு ஏற்றம் தரப்பட்டது. ஆனால், நாள் ஆக ஆக அவ்வேற்றம் குறைந்தது. தமிழின் மேம்பாடு தொடங்கியது. அம் மேம்பாட்டிற்கு ஆதரவு தந்தவர்கள் சைவ வைணவ சமய ஆசிரியர்கள். நாயன்மார்ககளும், ஆழ்வார்களும் 5, 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழை ஆதரித்தனர். சமணமும் பெளத்தமும் நிலை குலைந்தன. சைவ வைணவங்கள் மேலிட்டுத் தமிழை ஆதரித்தன. இவ்வியக்கங்களுக்குப் மேலும், கல்வெட்டுச் சாசனங்களுக்கும் பல்லவர் முதன்மை தந்தார்கள். இவர்கட்கு முன் கல்வெட்டுகள் வெகு குறைவு. அவை பிராமி எழுத்தில் இருந்தன. பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தம் என்று கூறும் அழகிய எழுத்துக்கள் ஆளப்பட்டன. அவ்வெழுத்துக் களின் அழகு பார்த்தால்தான் தெரியும். (கயிலாசநாதர் கோவிலிற் காண்க.) பிறகு தமிழை அதிகமாகப் போற்றத் தொடங்கியவுடன் பல்லவர்கள் தமிழிலேயே எழுதினார்கள். அன்றுமுதல் இப் புது இயக்கம் வெற்றியடைந்தது. ஆகவே, பல்லவர்களாலே சமயமும் தமிழும் போற்றப்பட்டதை நாம் அறியவேண்டும்.
இத்தன்மையான ஒரு பெரிய மன்னர் குடும்பத்தைப் பற்றி நாம் நன்றாக அறிய வேண்டாவோ அதனை அறிவிப்பதற்காகவே திரு.வித்துவான் மா.இராசமாணிக்கம் பிள்ளை. பி.ஓ.எல். அவர்கள் இவ்வரிய நூலை வெளியீட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் இதனை நன்றாகப் படித்துத் தம் பண்டைப் பெருமையை அறிவார்களாக அறிவது மாத்திரம் அன்றிப் பல்லவர் நாகரிகம் தோன்றிநின்ற நிலையங்கள், ஊர்கள், சான்றுகள் முதலியவற்றை முற்றும் தெரிந்துகொண்டு.அங்கங்கே சென்று அவற்றைப்பெருமிதத்துடன் நோக்குவார்களாக
நம் மக்கள் இந்த முயற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டுத் தமிழர் நாகரிகம் முழுவதையும்.பலவிதங்களிலும் வெளியிட்டும் அறிந்தும் போற்றுவார்களாக.
சென்னை. கோவைகிழார்