இதுவரை ஐந்து நூல்கள் வெளிவந்து, இப்போது ஆறாவதாய் இந்தப் பயணக் கட்டுரைகளின் தொகுதியை வெளியிடுகிறேன். இது என்னுடைய பயணக் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு. ஒவ்வொரு பயணத்தின் போதும் நான் பெற்று மகிழும் அனுபவங்கள் ஏராளம். அனைத்தையும் அப்படி அப்படியே எழுதிவிட முடிவதில்லை. காரணம் கையில் புகைப்படக்கருவி, கண்கள் முன் காட்சிகள் என்று கவனம் பதிய வேண்டிய அவசியம். அதற்கும் அப்பால் என்னுள் பதியும் உணர்வுகளை, ஓய்வாக இரவு நேரத்தில் நினைவிலிருந்து மீட்டு அவ்வப் போது குறித்து வைக்கும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தக் குறிப்புகளையே பிறகு நிதானமாக ஒழுங்குபடுத்தித் தேவையான கூடுதல் விவரங்களையும் சேர்த்துக் கட்டுரையாக்குகிறேன்.