ஒருவர் முன் கையை நீட்டும்போது புறங்கைப் பக்கம் உள்ளவர் நகங்களைப் பார்ப்பர்; எதிர்ப்பக்கம் நிற்பவர் உள்ளங்கைப் பகுதியைக் காண்பர். நகத்தைக் காணாதவர் பார்வையில் குற்றமும் இல்லை; இந்தப் பக்கம் நிற்பதாலேயே நகங்களை ஏறிட நேரிடுபவர் கண்களுக்குக் கூர்மை அதிகம் என்றும் இல்லை. இரண்டும் இரண்டு கோணங்கள் - அவ்வளவே. இதைக் குறிப்பிட்டுப் பேசும்போதுதான் பெரியவர்கள் ‘எதையும் கண்டனம், விமர்சனம் செய்யத் துணியும் முன்னர் இன்னொரு கண்ணோட்டம் உள்ளது என்பதை நினைவில் கொண்டு நிதானத்துடன் செயல்படுவதே நன்று' என்கின்றனர்.
நின்று நிதானித்து யோசித்தால் - 'இன்னொரு கண்ணோட்டம்' மட்டும்தானா உள்ளது? ம்ஹூம்... இல்லை. புறங்கை, உள்ளங்கை கோணங்களைத் தவிர, பக்கவாட்டுக் கோணங்கள், மேல், கீழ்க் கோணங்கள் என்று எத்தனை கண்ணோட்டங்கள் உள்ளன?
எந்த ஒரு சேதியையும் முழுமையாக அறிந்து உணர வேண்டுமென்றால் அத்தனை கோணங்களிலிருந்தும் காண முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம், விவேகம்?
இந்தக் கேள்வி எனக்குள் எட்டிப் பார்த்து, சின்னதாக விழிப்புணர்வை உண்டாக்கிய பின், ஒரு பொருளை, நபரை, அனுபவத்தை, உணர்வை - பல கோணங்களிலிருந்து பார்க்க, உணர, புரிந்துகொள்ளப் பிரயத்தனம் எடுத்தபோது - புதுசு புதுசாய் சந்தோஷம், வலி, இப்படியும் இருக்குமா என்ற ஆச்சர்யம், என்ன இது என்ற கேள்வி - எல்லாம் நிறையவே எழுந்தன. இதுநாள்வரை நான் பார்த்திராத கோணத்திலிருந்து சில விஷயங்களைக் கண்டபோது அவை என்னுள் உண்டாக்கிய பாதிப்புகளே 'சில அனுபவங்கள்...’
இதே போல - மிகப்பிரபலமாக இன்றைய சமுதாயத்தில் வளையவரும் சிலரை, அந்தப் பிரபலம் என்கிற முகமூடி இல்லாமல், நான் நானாக அவர்கள் இருந்த சமயங்களில் பார்த்துப் பழகி சந்தோஷித்திருக்கிறேன். அந்த நிறைவை, மகிழ்ச்சியை வாசகர்களுக்கு அறிமுகம் பண்ணும் ஆர்வமே 'சில மனிதர்கள்' கட்டுரைகளுக்குக் காரணம்...
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளெல்லாம் பல பத்திரிகைகளில், சுமார் ஏழு எட்டு வருஷ இடைவெளியில் வெளியானவை. சிலவற்றில் என் குழந்தைத்தனம், சிலவற்றில் என் முதிர்ச்சி வெளிப்படையாகத் தென்பட்டு, என்னுள் உண்டான மாற்றங்களை, மனவளர்ச்சியை, வாசகர்களுக்கு இனம் காட்டுவனவாகக்கூட இருக்கலாம்.
- சிவசங்கரி