தமிழ் வர்ணனையும் வரலாற்று ஆதாரக் குறிப்புகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்து ஜடை போட்டுக் கொள்கிறது!
'ராஜாதித்தன் சபதம்' - ஒரு வரலாற்று இலக்கியம். சோழ சாம்ராஜ்ஜியத்தின் காதலையும், வீரத்தையும் அள்ளித் தந்து - சோழ மன்னர்களின் பெரும்புகழை நம் மனசுகளில் விதைக்கும் வித்தக பணியை விக்ரமனின் தூவல் (பேனா) செய்திருக்கிறது.
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னர்கள் பலர் கம்பீரமாக பவனி வந்த, நடந்த கதையை வரலாறு தனக்குள் பதிவு செய்து கொண்டாலும், இன்றைய மக்களுக்குத் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றைக் கதை வழியாக கொண்டு செல்லும் மகாவேலையை செய்பவர்களில் முதன்மையானவர் விக்கிரமன் அவர்கள்.
உள்ளதை உள்ளபடி சொன்னால் அது வரலாறு. உள்ளபடி உள்ளதில் மக்கள் மொழியையும், தமிழ்த் தேன் நடையையும்... குழந்தைக்குப் பால் புகட்டும் பாணியில் செலுத்தும்போது, அது வரலாற்றுப் புதினம் ஆகிவிடுகிறது.
இன்றைய கம்ப்யூட்டர் மனிதர்களில் பலருக்கு வரலாறு என்பதே 'வேண்டா வெறுப்பாக பிள்ளை பெற்று காண்டாமிருகம்'னு பேரு வெச்ச கதையாகவே கசக்கிறது.
பலருக்கு மத்தியில் வரலாற்றின் பிசிறுகளை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள் ஒரு சிலர். சோழ அரசு, சோழர், சோழ வரலாறு என்று சொன்னவுடன் பலரும் சொல்லும் ஒரு சோழப் பெயர் - ராஜராஜசோழன். அந்தப் பெயரை மட்டுமே பலர் அறிய முடிந்திருக்கிறது. ஆனால், வரலாறு சொல்லும் சோழ செய்திகளை உற்று நோக்கினால்... சோழ ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்த வரிசையில் பல சோழ மாமன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
அந்த வரிசையில் முக்கியமான சோழ மன்னன் பராந்தகச் சோழன்.
விண் வரையிலும் சோழ நாட்டை உயர வைக்கும் ஆசையில் ராஜ தூரிகை எடுத்து சோழ ஓவியம் வரைந்தவன். அவனது வீர மகன்களில் ஒருவன் இராசாதித்தன். இவனது ஒரே அன்பு சகோதரி வீரமாதேவி. இராசாதித்தனின் சகோதரிக்கு ஏற்பட்ட அவமான எச்சிலைத் துடைத்தெறிந்து - சகோதரியையும், சகோதரியின் கணவன் கோவிந்தனையும் எழுச்சியுற வைத்து, மீண்டும் இராட்டிரகூட நாட்டு மன்னராகவும், அரசியாகவும் ஆக்கிக்காட்ட வீர சபதம் எடுக்கிறான் இராசாதித்தன்.
இந்த வரலாற்றுத் தேனை தனது ஐஸ் க்ரீம் தமிழால் படைப்பிலக்கியமாக்கித் தந்துள்ளார், வரலாற்று ஆசிரியர்களின் ஓப்பன் யுனிவர்சிட்டியாகத் திகழும் விக்கிரமன் அவர்கள்.
நாதன்