"ஏன் சார்?”
"பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து உங்களோடு தொடர்பு கொள்ளப் பார்த்துவிட்டு, முடியாமல் என்னிடம் கேட்டார்கள். எனக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை..."
அவர் விளையாடுகிறாரா அல்லது நிஜமாகச் சொல்கிறாரா என்று எனக்கு ஒரு நிமிடம் புரியவில்லை.
பிரதமர் அலுவலகத்திலிருந்து? என்னைத் தேடினார்கள்? எதற்காக?
கேட்டேன்.
"பிரதமர் அமெரிக்கா போன போது உங்களையும் அழைத்துக்கொண்டு போகலாமென்று முடிவு செய்திருந்தார்களாம்... நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டீர்களே!”
திரு. மூப்பனார் இப்படிக் கூறியதும், 1982-ல் திருமதி இந்திரா காந்தியை நான் சந்தித்ததும், "மேடம், ஒருமுறை நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்ல முடியுமா?” என்று கேட்டதும், அவர் புன் சிரிப்போடு, “செய்தால் போயிற்று!” என்று கூறியதும், அகாலமாய் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதில், என்னுடைய அந்த ஆசை நிறைவேறாமலேயே போனதும் நினைவுக்குள் எட்டிப் பார்த்தன.
அன்னை கொடுத்த வாக்கை தனயன் நிறைவேற்ற எண்ணுகிறாரா?
அதுதான் இந்த விசேஷ அழைப்பா?
அடுத்த முறை டெல்லி போனபோது, பிரதமரின் செய்தி உதவியாளர் திரு. மணிசங்கர் அய்யரைச் சந்தித்து, அவர்கள் அழைப்பு அனுப்பியமைக்கு நன்றி கூறி, கூடவே, தொடர்பு கொண்டபோது நான் இல்லாமலிருந்து அருமையான வாய்ப்பைத் தவறவிட்டதற்காக வருந்துவதையும் தெரிவித்தேன். மணிசங்கர் சிரித்தார். பிறகு, "அப்படியென்றால், அக்டோபர் மாதம் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் செல்லும்போது, உடன் வந்துவிடுங்கள்... வருத்தம் மறைந்துவிடும்!" என்றார், சிரிப்பு மாறாமலேயே.
சென்னைக்கு வந்தவுடன் 'விகடன்’ ஆசிரியர் திரு. பாலனோடு தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறினேன்.
"நல்ல முறையில் நீங்கள் எழுதும் எந்த எழுத்துக்கும் எங்கள் ஆதரவு உண்டு... மஞ்சள் கண்ணாடி மாட்டிக் கொள்ளாமல், நடுநிலை, நேர்மை தவறாமல் ஒரு பயணக் கட்டுரை 'ஜூனியர் விகடனில்' எழுதுங்கள்!” என்று கூறியதோடு நிற்காமல், பயணத்துக்குத் தேவையான கேமரா இத்தியாதிகளைக் கொடுத்து உற்சாகமூட்டினார்.
பிரதமரோடு சென்றதையும், பல கோணங்களிலிருந்து அவரைப் பார்க்க நேர்ந்ததையும், இன்னும் சில வித்தியாசமான அனுபவங்களையும், நடந்தது நடந்த விதத்தில், ஆசிரியர் பாலன் குறிப்பிட்டவாறு எதையும் மிகைப்படுத்தாமல், அடுத்து வரும் பக்கங்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ள முயன்றிருக்கிறேன். நீங்களே பிரதமரோடு பதினான்கு நாள்கள் பயணித்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கொடுக்குமாயின், அது எனக்கு நிறைவைத் தரும்.
இந்தப் பயணம் முழுமை பெற உதவிய நமது பிரதமர், திரு. ஜி.கே. மூப்பனார், திரு. மணிசங்கர் அய்யர், பிரதமரின் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கும், 'ஜூனியர் விகடனில்' தொடர் கட்டுரையாக வெளிவரச் சம்மதித்த ஆசிரியர் திரு. பாலன் அவர்களுக்கும், என் விசேஷ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயணக் கதையைத் துவங்குவதற்கு முன், 1983-ம் ஆண்டு ராஜீவ் காந்தியைச் சந்தித்து நான் கண்ட போட்டி இடம் பெறுகிறது.
- சிவசங்கரி