சோழர் வரலாற்றை முற்காலச் சோழர், பிற்காலச் சோழர் என்று இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முற்காலச் சோழர் ஆட்சி புரிந்த நகரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். உறையூர், திருவாரூர், பழையாறை கடல் கொண்டுபோன பூம்புகார் என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம், என்னும் சோழர்களின் தலை நகரங்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பு பிற்காலச் சோழர் வரலாறு வரிசையாக இருக்கிறது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழமன்னர்களைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூரிலிருந்து விஜயாலய சோழர் ஆட்சி புரியத் தொடங்கினார். அவருக்குப் பிறகு சோழ நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவருமே புகழ்மிக்கவர்கள்.
இராசராசன், இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களைத் தவிர ஆதித்தன், இராசாதித்தன் என்ற புகழ்பெற்ற அரசர்களைப் பற்றியும் இன்றைய மாணவ சமுதாயம் விரிவாகப் படிக்க வேண்டும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில், திருபுவனம் கோயில் போன்ற கோயில்களிலுள்ள சிற்பங்களை நேரில் சென்று காணவேண்டும்.
சோழ அரசர்களைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சி நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. கோயில்களிலுள்ள முன் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன.
அவற்றை எல்லாம் படித்தால் நம் முன்னோர்களின் பெருமை புலப்படும். பள்ளிப் பருவத்திலேயே வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் நம்மிடம் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பது வரலாறே.
வரலாற்றுச் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே மாணவர்களுக்கான எளிய நடையில் ‘பொற்காலத்தின் கதை'யை எழுதினேன்.
சோழர்களின் வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் முன்பு இந்தச் சிறு நூல் பெரிதும் உதவியாக இருக்கும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை வளர்க்கும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன்.
- விக்கிரமன்