என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும்,கவியின் நளினமுமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்தியவேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற தைரியமுள்ள ஓர் உழைக்கும் படைப்பை ‘நெற்றிக்கண்'ணிலும் படைத்தேன்.
இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் ‘பெரிய’ குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். நான் நெருங்கியிருந்து கண்ட சில அரசியல்வாதிகளின் சாயல்களும் நான் விலகியிருந்து உணர்ந்த பல அரசியல்வாதிகளின் சாயல்களும் இதில் வராது என்று உங்களுக்கு இந்த முன்னுரையில் உத்தரவாதம் கொடுப்பது அவ்வளவு நியாயமாக இருக்க முடியாது அல்லவா? ‘ஆப்ஸர்வேஷன்’ எழுத்தாளனின் குணமாகுமா, குற்றமாகுமா? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் எப்படி முடிவு கூறுவீர்களோ அப்படியே இது நியாயமுமாகலாம்; நியாயமாகாமலும் இருக்கலாம்.
ஆனால் என்னுடைய மனோதர்மத்தையே ஒரு நியாயமாக நிறுத்தித் திருவிழாவுக்குக் காப்புக் கட்டிக்கொண்டு கொடியேற்றுவதுபோல் அதனுயரத்தில் என்னுடைய சத்தியமான தேசிய நம்பிக்கைகளை ஏற்றி உயர்த்திவிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்குகிறேன். இதை இந்தச் சமயத்தில் எழுதுவதற்குச் சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எந்தச் சமயத்தில் எழுதினாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே; அதுதான் இந்தச் சமயத்திலும் காரணமாக இருக்கிறது; சிறப்பாகவும் இருக்கிறது. இனி. மேலே படியுங்கள்.
ஓ! ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே!
ஆம்! இப்போது நினைவு வருகிறது. இந்த நாவலைப் படிப்பதனால் என்ன இலாபம் என்று உங்களில் சிலர் கேட்கலாம்! அல்லது அப்படிக் கேட்க நினைக்கலாம்.
படிக்காமல் தவற விடுவதனால் நஷ்டம் நிச்சயமாக உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொன்னால் அப்படிச் சொல்வதற்காக என்னை மன்னிப்பீர்களா?