அன்புள்ள உங்களுக்கு... வணக்கம். மலை, வனம், பறவைகள், பாம்பு, அட்டை, அருவி, குருவி, கரடி, குகை, சித்தர், மூலிகை - இது வேறு ஒரு உலகம். அங்கே உங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் புதினமே மாயவன் காதலி. உங்கள் கால்களில் கல்லும் முள்ளும் குத்தும். காயம் படும். உடலில் அட்டை ஊறும். எச்சரிக்கை நாகம் கொத்தும். பயம் வேண்டாம். வைத்தியம் இருக்கிறது. மழை வானம் ரசிக்கலாம். குளத்தில் குளிக்கலாம். குளிருக்கு இதமாக சூடாக வரகுக் கஞ்சி கிடைக்கும். மூலிகைக் காற்றை சுவாசியுங்கள். பறவையின் இறக்கை அசைவின் ஒலி கூடதுல்லியமாகக் கேட்கும். மாயவன், பருத்தி, கோசலை, கடாரன், உளியன், பெருமாள், வைரவன், மணவாளன், சித்தர் யார் இவர்கள்? உங்களைப் போன்ற ஆனால் உங்களைப்போல இல்லாத வேறு வகை மனிதர்கள். அழகழகாக அச்சு வார்க்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் யாவும் அதனதன் குணங்களில் கடைசிவரை நூல் பிசகாமல் இருப்பது ரசனை. களவு என்பதை குலத்தொழிலாக செய்யும் கதாநாயகன் மாயவனின் வீரமும், விவேகமும், மனசும், அதன் வலிகளும், கனவுகளும், விரக்திகளும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது. கதாநாயகன் வில்லனை வெற்றி கொள்கிற கதைதான். ஆனால் யார் கதாநாயகன், யார்வில்லன், பகை என்ன, களம் என்ன, பின்னணி என்ன, யுத்தி என்ன என்பதில் தான் அற்புதமான தனித்துவம் மேலோங்குகிறது. ஒரு மோசமான அரசியல்வாதியும், ஒரு மோசமான போலீஸ்காரனும் கூட்டணி அமைத்தால் எப்படியெல்லாம் அநியாயம் செய்து மக்களை ஏமாற்றவும், திசை திருப்பவும் முடியும் என்பதை விலாவாரியாக அலசியிருக்கிறது இந்தப் புதினம். சுவாரசியமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அவை யூகிக்க இயலாதபடி அமைந்திருப்பதும் படைப்பாளியின் நிபுணத்துவத்தை பறைசாற்றும் அம்சங்களாகும். வசனப் பகுதியும் சரி, வர்ணனைப் பகுதியும் சரி, நிகழ்வுகளை மிகத் தெளிவாக கண் முன்னே காட்சிப்படுத்துகின்றன. வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டமும், விமரிசனமும் நல்ல தத்துவங்களாக சித்தர் பாத்திரம் மூலம் சொல்லப்பட்டிருந்தாலும் அவை படைப்பாளியின் நிஜ முகத்தை அடையாளம் காட்டுகின்றன. வெகு சில இடங்களில் பாத்திரங்கள் மிக நீளமாக பேசுகிறார்கள். அவை தேர்ந்த சட்ட நிபுணரின் வாதப் பிரதிவாதங்களைப் போல அமைந்திருந்தாலும் எல்லை தாண்டும்போது சற்றே அயர்ச்சியைத் தருகின்றன. இந்திரா சௌந்திரராஜனுக்கு எழுத்து பழகி எத்தனையோ வருடங்களாகின்றன. அந்த அனுபவ முதிர்ச்சி வரிக்கு வரி தெரிகிறது. வா என்றால் வந்து விழுகின்றன வார்த்தைகள், சொடக்கு போட்டால் சுழன்று வந்து அமைகின்றன சம்பவங்கள், ஏன், எதற்கு, எப்படி என்கிற எந்தக் கேள்விக்கும் விடைகள் இருக்கின்றன. சில இடங்களில் விஞ்ஞான ரீதியாகதர்க்கங்களுக்கு உட்பட்டு, சில இடங்களில் மெய்ஞான ரீதியான தத்துவங்களுக்கு உட்பட்டு, சில இடங்கில் இரண்டு வகையான பாத்திரங்களும் அவரவர் நிலையில் நின்று தர்க்கம் புரிகின்றன. முடிவுகளும் தீர்மானங்களும் உங்கள் கைகளில் விடப்படுகின்றன. இந்தக் கதை தொடராக எழுதப்பட்டது என்பதை ஒவ்வொரு அத்தியாயத்தின் கடைசி வரிகளும் காட்டிக் கொடுக்கின்றன. இது எந்த எழுத்தாளனாலும் தவிர்க்க முடியாத ஒன்றே. தொடராக எழுதும்போது ஒரு வாரத்திற்கு உங்களை நகம் கடித்துத் துப்பிக் காத்திருக்கச் செய்ய ஏதாவது திடுக் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. சில சமயம் அது கதையோடு இயல்பாக ஒன்றியும், சில சமயம் அது ஒட்டாமல் பல்லிளித்துக் கொண்டோதான் அமையும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. எந்த ஒரு படைப்பும் முதலில் உங்களை முதல் வரிகளிலிருந்து கடைசி வரி வரை படிக்க வைக்க வேண்டும். ஏற்பதும், மறப்பதும், விமரிசிப்பதும் அப்புறம், முதலில் படிப்பது! ரீடபிளிட்டி என்கிற அந்த படிக்க வைக்கும் வசியத்தன்மை இதில் அமோகமாக இருக்கிறது. பனிச் சிகரத்தில் சறுக்கிச் செல்லும் ஆப்பிளைப்போல வழுக்கிக் கொண்டு ஓடுகிற எழுத்து நடையழகுக்கு ஒரு சிறப்பு பாராட்டு. இந்தப் படைப்பு உங்களுக்கு ஒரு இனிய அனுபவமாகவும், புதிய தகவல்களின் அறிமுகமாகவும் அமையும். நண்பர் இந்திரா சௌந்தரராஜனின் உயரம் அளக்க இந்தப் படைப்பும் ஒரு நல்ல கருவி. ஆனால் நான் அறிவேன். அவரின் உயரம் இன்னும் இன்னும் அதிகம். அவரின் பேனாவின் சுழற்சி புதிய உச்சங்களைத் தொடும். தொட வேண்டும். தொட வாழ்த்துக்கள்.
काल्पनिक कहानियां और साहित्य