வரலாற்றுக் கதைகளில் பெரும்பாலும் அரச குடும்பத்தவர்களின் சொந்த வாழ்க்கையே சித்தரிக்கப்படுகின்றன; அந்தப்புர மகளிர், பட்டத்தரசி, இளவரசர், இளவரசி, அவர்கள் இதயத்தில் பூத்துப் பொலிந்த காதல்; பகைவர் மீது போர், ஒற்றர்கள் சூழ்ச்சி - என்று மன்னர்களைச் சுற்றியே சம்பவங்கள் கற்பனை செய்யப்படுகின்றன என்று விமர்சிப்பவர்கள் உளர்.
கடந்த காலச் சம்பவங்களைக் கருவாகக் கொண்டு கற்பனையும் சேர்த்து நாவல் புனையும் போது அரசர்களைத் தவிர அவர் ஆட்சிக் காலத்து மக்கள் வாழ்ந்த நிலை; அவர்கள் உணர்ச்சிகள் இவற்றையும் கருத்தில் கொண்டு எழுதினால் தொன்று நிகழ்ந்தனவற்றைப் படிப்போர் அறிய உதவியாக இருக்கும்.
அந்த வகையில் நான் எழுதும் வரலாற்றுப் புதினங்களில் நாட்டு மக்களையும் கதைப் பாத்திரங்களாகச் செய்து கதையில் அவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கத் தவறுவதில்லை.
வரலாற்று நாவல் எழுதச் சம்பவங்களைத் தேடிக் கல்வெட்டுகள், சாசனங்கள், ஆராய்ச்சியாளர் எழுதிய நூல்கள் இவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது கல்வெட்டுச் செய்தி ஒன்று என் மனத்தை ஈர்த்தது.
குலோத்துங்க சோழ மன்னரது ஆட்சிக் காலத்தில் பெண்கள் வறுமை நிலையால் தம்மை விற்றுக் கொண்ட செய்தி காணப்பட்டது.
அந்த அரசரது முப்பதாம் ஆட்சி ஆண்டில் வயிராதராயர் என்ற தலைவரும் அவர் மனைவியும் அடிமைகள் பலரை உடையவராயிருந்தனர் என்ற செய்தியும் கல்வெட்டிலிருந்து அறிய முடிந்த செய்தி.
என் மனத்தில் பல ஆண்டுகளாக இந்தச் செய்தி ஊறிக் கிடந்தது.
குலோத்துங்க சோழர், கோப்பெருஞ்சிங்கன், காஞ்சி மீது படையெடுத்த தெலுங்கு நாட்டுச் சிற்றரசன், குலோத்துங்கன் மகள் எல்லாரும் வரலாற்றுப் பாத்திரங்கள். வயிராதராயர் என்ற பெயர் கொண்ட தலைவரும் நிஜமே. அடிமைகளாகத் தங்களைத் தாங்களே பெண்கள் வறுமை காரணமாக விற்றுக் கொண்ட செய்தியும் உண்மை. பெண்கள் பெயர், அவர்களது கற்பனை. இந்த நான்கு கோட்டிற்குள் நிகழ்ந்த சம்பவங்கள் மட்டுமே என் கற்பனை.
- விக்கிரமன்