சிறுகதை இலக்கியம் இன்று வளர்ந்திருக்கிறது. மேலும் உலக இலக்கியங்களுக்குச் சமமாக அதை நிலை நிறுத்தப் பல எழுத்துச் சிற்பிகள் முன்நிற்கிறார்கள்.
இசைக்குப் பல இராகங்கள் இருப்பது போல் சிறுகதையும் பல வகைப்பட்டுத் திகழ்கிறது. சிறுகதைகளுள் வரலாற்றுச் சிறுகதையும் சிறப்பாக வளர்ந்து வருகிறது.
வரலாற்றுக் கதைகள் என்று தனியே பாகுபாடு செய்யக் கூடாது என்றாலும் இன்று வரலாற்றுச் சிறுகதை, விஞ்ஞானச் சிறுகதை (லயன்ஸ் ஃபிக்ஷன்) என்ற வகை பிரிக்கப்படுகின்றன.
இன்றைய சமூகம் நாளைய வரலாறு. நேற்றுச் சமுதாய நிகழ்வுகள் இன்று வரலாறாக மாறுகின்றன.
மனிதநேயமும், பண்பும், நாட்டில் எப்போதும் போலவே இருக்கின்றன. அரசர்கள் ஆட்சி புரிந்தனர். இன்று மக்கள் ஆட்சி என்றாலும், அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்பவர்கள் பலர் அரசர்களுக்குள்ள பண்பும், குணமும் கொண்டு இருக்கிறார்கள் ஆண்டான் அடிமை அடிமை வேறு வேடத்தில் உலவுகிறது ஏற்றத்தாழ்வு மாறவில்லை.
மண்ணாசை, பொன்னான பெண்ணாசை. அதிகார ஆசை, நாட்டைக் கவரும் ஆசை ஏதாவது ஒரு வடிவில் உலவி வருகிறது. ஆக, கதைக்கான கரு உருவாக ஆண்டுகளே வித்தியாசம்.
தமிழ்நாட்டின் வரலாற்றை இலக்கியக் கண்ணோட்டத்திலிருந்து நோக்கினால் சங்ககாலம் தான் பழைமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சங்ககால மன்னர்களைப் புலவர்கள் படைத்த இலக்கியங்களால் தான் அறிய முடிகிறது.
அவர்கள் வாழ்ந்த இடம், குலவிய மாதர்கள், பெற்ற குழந்தைகள், பூசல்கள், நடத்திய போர்கள் இவற்றிற்கெல்லாம் குறிப்பேடு ஏதுமில்லை. பாடல்களே சான்றாகக் கூறுகிறார்கள்.
கல்வெட்டு, பட்டயம், சாசனம், கோயில்களுக்கு அரசன் அளித்த வரியில்லாத நிலம், பொன், தீபம் ஏற்ற நெய், அதற்காக ஆடு, பசுக்கள் ஆகியவற்றிற்குக் குறிப்பு உண்டு. தனிப்பட்டவர்கள் அளித்த கொடை, நாள் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டு, செப்புப்பட்டய ஆதாரங்களில் வரலாறு எழுதப்பட்டது போக, எழுதப்படாத வரலாற்றிலிருந்து மெல்லிய ரேகையை எடுத்து உருவகப்படுத்தி காப்பியங்கள், நாவல்கள் புனைந்தார்கள் புலவர்கள், எழுத்தாளர்கள் அதனால் ஐம்பெருங்காப்பியங்கள் வரலாற்றுப் புதினங்கள் உதயமாயின.
வரலாற்றுப் புதினங்களிடையே ஊடுபாய்வது போல், வரும் முக்கிய நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அவற்றிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதலாம்.