ஒருவருடைய மனதில் உருவாகும் எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையையே நடத்திச் செல்கிறது. வாழ்வது என்பது வேறு; வாழ்க்கை நடத்துவது வேறு. வாழ்வது தனிப்பட்ட ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது. ஆனால் பலரைச் சார்ந்தும் அவர்களுடன் சேர்ந்தும்தான் வாழ்க்கை நடத்த முடியும். எத்தனை கோடி மக்கள் உள்ளனரோ அத்தனை கோடி 'கேரக்டர்'களும் உண்டு. அசாதாரணமான ஒரு 'கேரக்டரை' தேர்ந்தெடுத்து அவனுடைய மன ஓட்டங்களால் ஏற்படும் பாதிப்பை நிலைக்களனாகக் கொண்டு இந்த நவீனத்தை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.
நந்து - நவீனத்தின் நாயகன். அவனேதான் வில்லனும். நல்லவன், புத்திசாலி, உயரவேண்டுமென்ற உத்வேகம் உள்ளவன். ஆனால் தன்முனைப்பும் நிலையில்லாத மனமும் கொண்டவன். அந்த மனம் அவனைக் குரங்காக ஆட்டிப் படைக்கிறது. அவனைச் சார்ந்துள்ளவர்கள் மனதைப் புண்படுத்துகிறது. தாய், தந்தையரையும் தாலிகட்டிக் கொண்டவளையும் தவிக்கச் செய்கிறது.
படிப்பவர்களை மஞ்சுவிடம் பரிவும் நந்துவிடம் ஆத்திரமும் ஏற்படக்கூடிய விதத்தில் கதையோடு இணைத்துச் செல்கிறார்.
அத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு, ஆறு வருடங்கள் தவிக்கவிட்டு, திடீரென்று ஒரு நாள் வந்து நிற்கும்போது பெற்றவர்களே அவனைப் புறக்கணிக்க வேண்டுமென்ற முடிவை எடுக்கும்போது, அதிகமாகப் பாதிக்கப்பட்டவளான மஞ்சு எடுத்த முடிவினால் அவள் தெய்வமாக உயர்ந்து விடுகிறாள். அவளது முடிவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் இன்னொரு கதைக்கு ஆரம்பமாக இருக்கலாம். ஆனால் கதையோட்டத்துடன் ஒன்றிப் போனவர்கள், பாத்திரங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், மஞ்சு பழிவாங்க வேண்டுமென்றுதான் விரும்பியிருப்பார்கள். அது நியாயமில்லை என்றும் கூறமுடியாது.
ஆனால், மஞ்சு பாரம்பரியப் பண்பாடு மிக்க இந்த மண்ணில் பிறந்தவள் அல்லவா? எனவே பாரதப் பெண்ணாக உயர்ந்து நிற்கிறாள்.