இராஜராஜ சோழன் என்றதுமே, நம் மனக்கண்களின் முன், வானளாவ எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயில்தான் காட்சி தரும். காலத்தை யாரும் இழுத்துப் பிடித்து நிறுத்திவிட முடியாது. ஆனால், மாமனிதர்கள் தங்கள் மகத்தான செயல்களின் மூலம், காலத்தை அளக்கும் கருவி போல், அல்ல, அல்ல காலத்தையே வியந்து திரும்பிப் பார்க்க வைக்கும் அற்புதமாய் அபூர்வமான தடங்களை, அழுத்தமாகப் பதித்து விட்டுச் செல்கிறார்கள்.
தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் இராஜேந்திர சோழனோ எட்டியவரை பாய்ந்து, மத்திய இந்தியாவைத் தாண்டி, இமயத்தில் பெருகி வரும் கங்கை வரை தனது வாளை நீட்டினான். தந்தை விழிஞத்தில் கலமறுத்து, மேற்குக் கடல் வரை மேவி நின்றால், மகன் கிழக்குக் கடலைத் தன் மரக்கலப் படையால் கடைந்தும் குடைந்தும் வீரம் பதித்தான். சோழராட்சியை அழுத்தமாக நிலைப்படுத்தி, பின் வந்த சந்ததியர் பெருமை பேசி வாழ வெற்றிப் பதாகையை விண்முட்ட உயர்த்தி வைத்தவன் இவனே.
‘இவற்றையெல்லாம் நாங்கள் வரலாற்று நூல்களில் நிறையவே படித்திருக்கிறோமே’ என்கிறீர்களா? இந்த வரலாற்றுப் புதினத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும்தான். அதனால்தான் இவ்வளவும் எடுத்துச் சொல்ல நேர்கிறது.
இதில் நான் மிகவும் ரசித்த சம்பவங்கள், சாகசங்கள், வர்ணிப்புகள், தத்துவம் புதைந்த வார்த்தைகள் என ஒரு பட்டியலிட்டுத் தொகுத்தால், அவை ஓர் இலவச இணைப்பு வெளியிடத் தக்க அளவில் சிறு நூலாகவே அமைந்து விடும். எனவே, அவற்றை இங்கு எடுத்தெழுதவில்லை. ஊன்றி வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை உணர்ந்து மகிழ்வர். காலப் பெருவெளியில், கதையென்னும் கலத்திலேறி, மகத்தான சரித்திரச் சம்பவங்களை நிஜ தரிசனம் செய்ய நிச்சயம் இந்த ‘வந்தியதேவன் வாள்’ என்னும் வரலாற்றுப் புதினம் உங்களுக்கு உதவும் என உறுதி கூறுகிறேன்.