மூங்கில் கோட்டை' என்ற இந்த நாவல், இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ் செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர் முதலிய எழுவர் படைகளைத் தலையாலங் கானத்தில் முறியடித்து சேரமானான யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்ததன்றி, சிறை வைத்த இடத்தைச் சுற்றிலும் அகழிகளை வெட்டி அவற்றின் மேல் மூங்கில்களைப் பரப்பி மறைத்து வைத்ததால், சேரனை விடுவிக்க வந்த யானைப் படைகள் அந்த அகழிகளில் வீழ்ந்து அழிந்து போனதாக வரலாறு கூறுகிறது. இத்தகைய கொடுஞ் சிறையினின்று யானைக்கண் சேய் தந்திரத்தால் தப்பியதாகவும் குறிப்புகள் காணப் படுகின்றன.