தேசத்தந்தையாக விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கனி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை, ஒத்துழையாமையை ஆதரித்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் திகழ்ந்தார். புரட்சி வழியே சென்ற போஸ் பல சாகஸ பயணங்களைக் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார். ' நீ காண விரும்பும் மாற்றத்தை முதலில் உன்னிடமிருந்தே தொடங்கு' என்ற காந்தியின் அறிவுரையை அவர் வாழும் காலத்திலேயே பின்பற்றும்விதமாகவே ஒரு கட்டத்தில் காந்தியை விட்டு விலகி பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன் கொள்கையின் மீதான பற்றுதலையும், தீவிரத்தையும் அதற்கிருக்கும் மக்கள் ஆதரவையும் நிரூபித்துக் காட்டினார் போஸ். ஆட்சியாளர்கள், அவர்கள் வகுத்த சட்டத்திற்கு உட்பட்ட தார்மீக உரிமைகளைக் கோரும் சமரசமே தன் அறப்போராட்டத்தின் உச்சபட்ச இலக்கு என்பது காந்தியின் நிலைப்பாடு. சுய ராஜ்ஜியம் என்பது எங்கள் உடைமை, அதைத் தட்டிப்பறித்தவனிடம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்பது போஸின் பிரகடனம். 'பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்று கிளம்பினால் உலகமே குருடாகிவிடும் ' என்று எச்சரித்தார் காந்தி. உலகப்போரில் பிரிட்டனின் பின்னடைவை சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள மறுத்தார். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். என் எதிரியின் எதிரி என் நண்பன் என்று சூளுரைத்த போஸ் ஆங்காங்கே உதிரிகளாக இருந்த புலம்பெயர்ந்த இந்தியர்களை ஒன்று திரட்டினார்.
Skönlitteratur och litteratur